UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 12:10 PM
ராம்நகர்:
கல்வி அறிவில்லாத பலருக்கும், அறிவு ஒளியை ஏற்றுவதில், கர்நாடக நுாலகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கிராமப்புற மக்களை படிப்பில் ஊக்கப்படுத்துகின்றன. இதனால் பல பெண்கள் கல்வி கற்கின்றனர்.
கல்விக்கு எல்லையே இல்லை. கல்வி கற்க வயது தடையாக இருப்பதில்லை. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். எந்த வயதிலும் கல்வி கற்கலாம். இதை மனதில் கொண்டே, முதியோர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வயதான பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
பள்ளிக்கூடம்
பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கவும், அவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகவும், பொது மக்களின் வசதிக்காகவும் கர்நாடக அரசு, நுாலகங்கள் அமைத்துள்ளது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், நுாலகங்கள் செயல்படுகின்றன. இவை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, படிப்பறிவு இல்லாத கிராமத்து பெண்களுக்கு கல்விக்கூடமாக மாறியுள்ளன.
பெண்களுக்கு கிராம பஞ்சாயத்துகள், நுாலகங்கள் மூலமாக எழுதவும், படிக்கவும் கற்று தருகின்றன. சிறு வயதில் படிக்க முடியவில்லையே என, ஏங்கி தவிக்கும் கிராமத்து பெண்கள், நுாலகம் மூலமாக படிக்கும் கனவை நனவாக்குகின்றனர். ராம்நகரின் நீலசந்திரா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலும் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பீரம்மா உட்பட பல பெண்கள் கல்வி கற்கின்றனர்.
80 பெண்கள்
காலை முதல் மாலை வரை பெண்களுக்கு ஓய்வில்லாத பணி இருக்கும். மாலை நேரத்துக்கு பின், நுாலகத்துக்கு வந்து கல்வி கற்கின்றனர். இதற்கு முன் பலருக்கும், பேனாவை எப்படி பிடிப்பது என்றே தெரியாது.
ஆனால் இப்போது கடிதம் எழுதும் அளவுக்கு, கற்று தேர்ந்துள்ளனர். இதற்கு நுாலகங்களே பெரிதும் உதவுகின்றன.
நடுத்தர வயது பெண்களுடன் மூதாட்டிகளும் கூட நுாலகத்தில் உறுப்பினராகி உள்ளனர். நீலசந்திரா மாவட்ட பஞ்சாயத்து எல்லைக்குள் 11 கிராமங்கள் உள்ளன. தினமும் 80 பெண்கள் கல்வி கற்க நுாலகத்துக்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால், அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கூடுதல் தலைமை செயலர் உமா மகாதேவன் கூறியதாவது:
கல்வி அறிவு இல்லாதோருக்கு கன்னடம் எழுத, படிக்க கற்று தருகிறோம். பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்ட பெண்கள், ஆர்வத்துடன் நுாலகத்தில் கல்வி படிக்கின்றனர். பெண்கள் பலரும் பட்டதாரிகளாக விரும்புகின்றனர்.
பேரன்கள்
பெண்களின் கல்விக்கு கிராம பஞ்சாயத்துகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் அமைக்கப்பட்ட நுாலகங்கள், பெரிதும் உதவுகின்றன. படிக்காத பெண்களை கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றன. மூதாட்டிகளும் கூட, தங்களின் பேரப்பிள்ளைகளுடன் படிக்க வருகின்றனர்.
சிறார்களும் தங்களின் தாத்தா, பாட்டிக்கு கல்வி கற்க உதவுகின்றனர். நீலசந்திரா மாவட்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கிராமத்தின் மூன்று பெண்கள் தற்போது எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு தயாராகின்றனர். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை கொடுத்து, தேர்வுக்கு தயாராக்குகிறோம்.
கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், வெளியே சென்று கல்வி கற்க முடியாத மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று, கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.