தமிழக பள்ளிக்கல்விக்கான நிதி ரூ.2,401 கோடி நிறுத்தம்; அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழக பள்ளிக்கல்விக்கான நிதி ரூ.2,401 கோடி நிறுத்தம்; அமைச்சர் குற்றச்சாட்டு
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 12:09 PM
சென்னை:
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 2,401 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக, அமைச்சர் மகேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், 2018ல் இருந்து செயல்படுகிறது. இதற்காக மத்திய அரசு 60; மாநில அரசு, 40 சதவீத நிதியை பகிர்வு முறையில் விடுவிக்கின்றன. அதன்படி, கடந்த 2023 -- 2024ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கு, 3,533 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், இரண்டு தவணைகளை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது.
மூன்றாம் தவணையை, பி.எம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தான் ஒதுக்க முடியும் என்றது.
அத்திட்டத்தில், மும்மொழிக் கொள்கை உள்ளது. அதை ஏற்றால், தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
மேலும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்ட போது, பி.எம்.ஸ்ரீ திட்டம் இல்லாத நிலையில், நிதியை நிறுத்தக்கூடாது என, கடிதம் எழுதிய நிலையில், கடந்தாண்டுக்கான நிதியையும், இந்தாண்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியையும், மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய அரசின் புள்ளி விபரப்படி, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், 17,632.41 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதனால், தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற, கடந்தாண்டுக்கு ஒதுக்கப்பட்ட, 249 கோடி ரூபாய் மற்றும் இந்தாண்டுக்கான, 2,152 கோடி ரூபாய் என மொத்தம், 2,401 கோடி ரூபாயை, மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.