சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா: தினமலர் கை கொடுத்தது என பெருமிதம்
சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா: தினமலர் கை கொடுத்தது என பெருமிதம்
UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 11:11 AM

மதுரை:
சிவில் சர்வீஸஸ் தேர்வில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த லிந்தியா 25, முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 354வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
அவர் கூறியதாவது:
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முடித்து கன்சல்டன்டாக வேலை செய்தேன். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேலையை விட்டேன். அப்பா, அம்மா, அண்ணன் ஊக்குவிப்பால் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் 354 வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.ஏ.எஸ்., கிடைக்க வாய்ப்பிருக்கிறது; ஐ.பி.எஸ்., கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறேன். எது கிடைத்தாலும் பணிபுரிய தயாராக உள்ளேன்.
வீட்டில் இருந்தபடி தினமும் 9 முதல் 10 மணி நேரம் படிப்பேன். ஒவ்வொரு ஞாயிறன்றும் மாதிரி தேர்வு எழுதுவேன். தமிழ் தகுதி தாளுக்கு தினமும் தினமலர் நாளிதழ் படித்தது கைகொடுத்தது. நரிக்குறவர் சமூக மக்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை பெற்றுத் தந்த செய்தியை படித்தபோது, இளம் வயதில் சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவரக் கூடிய அதிகாரம் இந்த பதவிகளில் இருப்பதாக உணர்ந்தேன். அதுதான் இத்தேர்விற்கு தயாராக உந்துசக்தியாக இருந்தது. ஆப்ஷனல் பேப்பர், மாதிரித் தேர்வுகள், நேர்முகத் தேர்விற்கு மட்டும் மையங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
இத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் புரிந்து சுய விருப்பத்துடன் படிக்க வேண்டும். மூன்று, நான்கு முறைக்கு மேல் தேர்வெழுதியும் கிடைக்கவில்லை என்றால் அடுத்து என்ன என்பதை தீர்மானித்துவிட்டு தேர்விற்கு தயாராக வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு அவசியம் என்றார்.
காரைக்குடி மாணவி வெற்றி
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த மாணவி அஞ்சுகா சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் காரைக்குடியைச் சேர்ந்த பழனி மகள் அஞ்சுகா 22 வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை பழனி எல்.ஐ.சி., ஏஜன்டாக உள்ளார்.அஞ்சுகா இந்த தேர்வில் 472 வது இடம் பெற்றுள்ளார். அஞ்சுகா கூறியது: சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் படித்தேன். முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எஸ்., கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எனது முதன்மை விருப்பமாக ஐ.ஆர்.எஸ்., தேர்வு செய்துள்ளேன் என்றார்.