UPDATED : ஏப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தேசிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பழம்பெரும் பல்கலைக்கழகங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், இதுகுறித்துக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்தால், இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் போல தன்னாட்சி உடையதாகத் திகழும்.
இவை தேசியப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்படும் நிலை ஏற்படும். இதனால் இப்பல்கலைக்கழகத்திற்குத் தேவையான முழுமையான நிதியுதவியும் மத்திய அரசிடமிருந்தே கிடைக்கும். அத்துடன் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக குடியரசுத் தலைவரே இருப்பார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் ஊதியம், இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தார். 1857ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.