UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:26 AM
மதுரை :
தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி 2019 - 2024 வரை மாநிலத்தில் சிறப்பாக சேவை செய்த மதுரை டாக்டர்கள் 6 பேர் உட்பட 105 பேருக்கு சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலையில் நேற்று விருது வழங்கப்பட்டது.
தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை நிர்வாக மருத்துவ அலுவலராக பணியாற்றி நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற டாக்டர் காந்திமதிநாதன், மதுரை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் சரவணக்குமார், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சரவணன் ராபின்சன், அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சரவணன், முன்னாள் டீன் மருதுபாண்டியன், மூத்த டாக்டர் சின்னதுரை அப்துல்லா ஆகியோருக்கு அமைச்சர் சுப்ரமணியன் விருது வழங்கினார்.
டாக்டர் காந்திமதிநாதன் கூறியதாவது:
2013ல் தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலராக பொறுப்பேற்றேன்.
காசநோய், பிற தொற்று நோய்களுக்கான தனித்தன்மை வாய்ந்த மருத்துவமனை என்பதால் நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பூக்களுடன் கூடிய நந்தவனம், மரங்களால் ஆன வனத்தை உருவாக்கினேன்.
நோயாளிகள், அவர்களது உறவினர்கள் வார்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காத அளவு நுாலகம், நடைப்பயிற்சி பூங்கா, கேரம், செஸ் விளையாட்டு, பொழுதுபோக்கும் இடம், யோகா, தியான அறை அமைத்துள்ளோம்.
இந்த சேவைகளை பாராட்டி குடும்பத்தினருடன் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதி தந்தார். இந்த சேவைகளுக்காக மாநில விருதும் கிடைத்தது மகிழ்ச்சி என்றார்.