மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் கமிட்டிக்கு ஒப்புதல்
மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் கமிட்டிக்கு ஒப்புதல்
UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 07:35 PM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் பரிந்துரைத்த கன்வீனர் கமிட்டிக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். பல்கலை துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவும் முறைப்படி ஏற்கப்பட்டுள்ளது.
இப்பல்கலை துணைவேந்தராக இருந்த குமார் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்ததால் பல்கலையை வழிநடத்த கல்லுாரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் உறுப்பினர்கள் வாசுதேவன் (கவர்னர் பிரதிநிதி), தவமணி கிறிஸ்டோபர் (கல்வி பேரவை பிரதிநிதி), மயில்வாகனன் (பல்கலை பேராசிரியர் பிரதிநிதி) ஆகியோர் கொண்ட குழுவை சிண்டிகேட் தேர்வு செய்து, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கிடையே வாசுதேவன் ஆராய்ச்சி பணிகள் காரணமாக வெளிநாடுகள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கமிட்டியில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என உயர்கல்வி செயலருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனால் கவர்னர் ஒப்புதல் கிடைக்க காலதாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், வாசுதேவனும் இடம் பெற்றுள்ள பல்கலை சிண்டிகேட் தேர்வு செய்த கன்வீனர் கமிட்டிக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரை துணைவேந்தருக்கான அன்றாட பணிகளை இக்குழு கவனிக்கும்.