பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் சறுக்கியது மதுரை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் சறுக்கியது மதுரை
UPDATED : மே 17, 2025 12:00 AM
ADDED : மே 17, 2025 10:01 AM
மதுரை:
மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை (94.07 சதவீதம்) விட இந்தாண்டு 0.14 சதவீதம் குறைந்தது. மாவட்ட 'ரேங்க்'கும் மதுரை 22வது இடத்திற்கு சென்றது.
மாவட்டத்தில் 482 பள்ளிகளை சேர்ந்த 37,626 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 35,342 பேர் தேர்ச்சி பெற்றனர் (93.93 சதவீதம்). மாணவர்களை விட (91.55 சதவீதம்) மாணவிகள் (96.26 சதவீதம்) 4.71 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.08 சதவீதம். இதன் மூலம் அரசு பள்ளிகள் தேர்ச்சியில் மாநில அளவில் மதுரை 27 வது இடத்திற்கு சென்றது.
பாடம் வாரியாக ஆங்கிலம் 3, கணிதம் 89, அறிவியல் 414, சமூக அறிவியல் 249 பேர் என 755 பேர் சென்டம் மதிப்பெண் பெற்றனர். தமிழில் ஒருவர் கூட பெறவில்லை.
சறுக்கியது ஏன்
கடந்தாண்டு 1667 பேர் பாடம் வாரியாக சென்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் 168 பள்ளிகள் சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட மொத்த தேர்ச்சி மாநில தேர்ச்சியை விட அதிகரித்துள்ளது. இருப்பினும் 0.14 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தது. மெட்ரிக் பள்ளிகளில் மொத்த தேர்ச்சி கடந்தாண்டை விட சரிந்து 22ம் இடத்திற்கு சென்றது.
20க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் எதிர்பார்த்த தேர்ச்சியை எட்டவில்லை. தேர்ச்சி குறைவுக்கு காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.
பிளஸ் 1ல் முந்தியது
பிளஸ் 1 தேர்வில் மதுரை 93.91 தேர்ச்சி பெற்றது. கடந்தாண்டு 16 வது இடத்தில் இருந்த மதுரை, இந்தாண்டு 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கைதிகள் ஆல் பாஸ்
மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 பெண்கள் உட்பட 65 கைதிகள் எழுதி பாஸ் ஆகினர். மணிகண்டன் 398, விமலா 395, ரமணன் 394 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர்.பிளஸ் 1 தேர்வில் ஒரு பெண் உட்பட 43 பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். கோபி 509, ரஞ்சித் 496 மற்றும் பெண்களில் கவிதா 374 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்ச்சி பெற்ற கைதிகளை டி.ஐ.ஜி., முருகேசன் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பாராட்டினர்.
மாநகராட்சி பள்ளி தேர்ச்சி 91.25 சதவீதம்
மாநகராட்சியில் 24 பள்ளிகளை சேர்ந்த 1737 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1585 பேர் தேர்ச்சி (91.25 சதவீதம்) பெற்றனர். இதில் மாசாத்தியார் பெண்கள், கம்பர், பாரதியார் ஆண்கள், தல்லாகுளம் உயர்நிலை, பாரதிதாசனார், என்.எம்.எஸ்.எம்., உமறுப்புலவர் ஆண்கள், மணிமேகலை பெண்கள் ஆகிய பள்ளிகள் சென்டம் தேர்ச்சி பெற்றன. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா பாராட்டினர்.