மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும்: உச்சநீதிமன்றம்
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும்: உச்சநீதிமன்றம்
UPDATED : மார் 14, 2026 09:33 PM
ADDED : மார் 14, 2026 09:34 PM

புதுடில்லி:
'பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால், அவர்களுக்கான வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும்' என கூறிய உச்சநீதிமன்றம், அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் எனக்கோரி, வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கேள்விக்குறி
அதில், 'பள்ளி செல்லும் மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவருக்கும் மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும். அது தொடர்பாக உரிய நெறிமுறைகளை உருவாக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷம்ஷாத், “கேரளா உட்பட சில மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மாதவிடாய் விடுப்பு வழங்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன,” என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாதவிடாய் விடுமுறை வழங்கும் விவகாரத்தில் சில மாநிலங்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள தன்னார்வ நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், இதை சட்டமாக்கினால் பெண்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு வேலை கிடைப்பது கடினமாகிவிடும். அவர்களை யாரும் பணியமர்த்த மாட்டார்கள். வேலைக்கு செல்லும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.
தள்ளுபடி
இதற்கான விடுமுறை சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டால், அது உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். பணியிடங்களில் பெண்களிடையே மனரீதியான பயத்தை உருவாக்கும். பெண்கள், ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் என்ற தவறான பிம்பத்தையும் ஏற்படுத்தும்.
பெண்களை வேலைக்கு அமர்த்துவதை கட்டாய விடுமுறை ஊக்குவிக்காது. மாறாக, அவர்களை பணியில் அமர்த்தாமல் தவிர்க்கும் நிலையை ஏற்படுத்தும். சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதைச் சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கினால், நீதித்துறை அல்லது அரசுப் பணிகளில் கூடப் பெண்களைச் சேர்த்துக்கொள்ளத் தயக்கம் காட்டப்படும். இது போன்ற விவகாரங்களில் கொள்கை முடிவு எடுப்பது அரசின் பணி.
மனுதாரர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளதால், அவர்கள் அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க வேண்டும். இதை சட்டமாக்கினால், சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

