ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு; பீகாரில் சர்ச்சை
ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு; பீகாரில் சர்ச்சை
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 07:56 PM
பாட்னா:
பீகாரில் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு கர்ப்ப கால விடுப்பு வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைஷாலி மாவட்டத்திற்குட்பட்ட மகுவா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர், மகப்பேறு விடுப்பு கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு மேல் அதிகாரிகளும் அனுமதி கொடுத்திருப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கிய ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைதளங்களில் சக ஆசிரியர்கள் பகிர்ந்ததால், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி விளக்கம் அளித்து பேசியதாவது:
இது தொழில்நுட்பக் கோளாறு தான். விடுப்பு கேட்டு தவறான ஆப்சனை அவர் தேர்வு செய்துள்ளார். தற்போது, அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது. பெண்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளை உடனிருந்து பராமரிக்க விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுகிறது.
வழக்கமான மாதாந்திர விடுப்புகளை எடுத்தாலும், அவர்கள் கணக்கில் உள்ள விடுப்புகள் கழிக்கப்படுவதாக சில ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். அது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.