விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; சந்தேகம் எழுப்பியவர்களுக்கு நாசா விளக்கம்
விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; சந்தேகம் எழுப்பியவர்களுக்கு நாசா விளக்கம்
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 07:55 PM
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதை அடுத்து, நாசா விளக்கமளித்துள்ளது.
எதிர்பார்ப்பு
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 59. இவரும், புட்சி வில்மோர் என்ற மற்றொரு வீரரும் ஜூன் 5ல், போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் வாயிலாக விண்வெளி சென்றனர். ஒன்பது நாட்களுக்கு பின் அதே விண்கலத்தில் அவர்கள் பூமிக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். அடுத்த ஆண்டுதான் அவர்கள் பூமிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டது.
இந்த வீடியோ, இணையதளவாசிகள் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
எட்டு நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்க சென்ற அவர்களிடம் கிறிஸ்துமஸ் ஆடைகள், அலங்கார பொருட்கள் எப்படி வந்தன? விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருப்போம் என அவர்களுக்கு தெரியுமா?
இல்லையென்றால், அவர்களுக்கு இந்தப் பொருட்களை வினியோகித்தது யார்? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இதற்கு நாசா விளக்கமளித்துள்ளது.
எக்ஸ் விண்கலம்
அதில், சர்வதேச விண்வெளி நிலையம் ஆண்டுதோறும் பல்வேறு பொருட்களால் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வாயிலாக, கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறி உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுப் பொருட்களும், சில அறிவியல் பணிகளுக்கான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன என, தெரிவித்துள்ளது.