சல்மான் ருஷ்டியின் சர்ச்சை புத்தகம் 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் விற்பனை
சல்மான் ருஷ்டியின் சர்ச்சை புத்தகம் 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் விற்பனை
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 07:54 PM
புதுடில்லி:
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தடை செய்யப்பட்ட தி சாத்தானிக் வெர்சஸ் என்ற சர்ச்சை புத்தகம் 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி என்பவர் எழுதிய தி. சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிப்பதாக இருந்ததாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இவரது உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு நாடுகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்தார். அவரது வலது கண் பார்வை பறிபோனது.
இந்தியாவில் சர்ச்சை புத்தகத்திற்கு கடந்த 1988-ம் ஆண்டு அப்போதைய ராஜிவ் பிரதமராக இருந்த போது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் நீக்கப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பின் தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் இந்தியாவில் ரூ. 1999 என்ற விலையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த அளவே அச்சிடப்பட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக பஹரிஸன் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர் ரஜினி மல்ஹோத்ரா எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சர்ச்சை புத்தகத்தை இந்தியாவில் விற்பனைக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.