UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:23 AM

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகிலுள்ள பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. மருத்துவக்கல்லுாரியில் 300 மாணவர்களும், 150 எய்ம்ஸ் மாணவர்களும் படிக்கின்றனர்.
இவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை. தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் விளையாட்டு மைதானம் உள்ளது. ஜிம் வசதியும் இல்லை. கேன்டீன் வசதியும் இல்லை. இரவு நேரத்தில் மாணவர்கள் ஒரு அவசர ஆத்திரத்திற்கு பொருள் வாங்க வேண்டும் என்றால் ராமநாதபுரம் டவுனுக்கு சென்றுதான் வாங்க வேண்டும். இதனால் மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்து செல்லும் கழிவு நீர் சுத்திகரிப்பதற்கு பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாததால் விடுதிக்கு அருகிலேயே கழிவு நீர் குளம் போலதேங்கியுள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்கள் இரவு நேரத்தில் துாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மருத்துவக்கல்லுாரியிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்ல மற்ற மருத்துவக்கல்லுாரிகளில் பஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் பஸ்கள் வழங்கப்படவில்லை. மாணவர்கள் அரசு பஸ்சை எதிர்பார்த்துத்தான் செல்லும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனை கல்லுாரியில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் இருப்பதால் மாணவர்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். பார்க்கிங் இடத்தில் கூரை வசதியின்றி மாணவர்களின் வாகனங்கள் வெயில், மழை நேரங்களில் பாதிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி என்ற பெயர் மட்டுமே உள்ளது. அதற்கான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இங்குள்ள அதிகாரிகள் மருத்துவக்கல்லுாரி இயக்குநரகத்திற்கு தொடர்ந்து வசதிகள் செய்து தரக்கோரி வலியுறுத்தியுள்ளனர். மருத்துவக்கல்வி இயக்குநரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என மாணவர்கள் கூறினர்.