UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 08:00 AM
திண்டுக்கல்:
மனவளக்கலை என்பது மனிதனைத் திருத்தி அமைக்கக் கூடிய ஒரு பயிற்சி. உடல், உள்ளம், செயலால் மனிதனை மனிதனாகவே வாழ செய்ய அவசியமான திருத்தங்களைக் கொடுக்கும் கலை இது. இப்படிப்பட்ட மனவளக்கலை பயிற்சியினை திண்டுக்கல்லில் அறிவுத்திருக்கோயில் வழங்கி வருகிறது. இக்கோயில் திண்டுக்கல்லில் நிறுவப்பட்ட 30 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதன் ஆண்டு விழாவில் பங்கேற்ற பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் தங்களின் அனுபங்களை பகிர்ந்து கொண்டனர்.அவற்றில் சில இதோ...
நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது
தாமோதரன், நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில், திண்டுக்கல்: கோயில்கள் எல்லா ஊர்களிலும் இருந்தாலும் அறிவுத் திருக்கோயிலோ ஒன்றுதான் இருக்கிறது. இந்த கோயிலானது மனிதனுக்கு உடல், உயிர்,மனதிற்கு விருப்பு, வெறுப்பு, துன்பம் வருகிறபோதெல்லாம் நினைவுக்கு வரும். உடல், உயிர் ,மனதை சரிசெய்ய வேண்டுமென்பதே அறிவுத் திருக்கோயிலின் நோக்கம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிஅளிக்கிறோம். மனவளக்கலைமனிதனுக்கு தேவையான பயிற்சியாக இருக்கிறது. நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் சிறந்த பயிற்சியாக இந்தகாலத்திற்கும் ஏற்றாற்போல் இருப்பதால் தான் அனைவரும் வரவேற்கின்றனர்.
மாற்றத்தை ஏற்படுத்தும்
ஆனந்தஜோதி ராஜ்குமார், ரோட்டரி மாவட்ட ஆளுநர்,திண்டுக்கல்: அறிவுத் திருக்கோயில் பெருமை சேர்க்கும் இடம். இதன் அருமை எல்லோருக்கும் தெரியாது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் நன்குஅறிவர். இங்கு பயின்ற எனக்கு என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்.அறிவுகண் திறக்கப்பட்டது என்றே கூறலாம். அறிவுத்திருக்கோயில் தான் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது.தியானத்தின் மூலம் கிடைக்கும் அமைதி, பண்பாடு, மனம் தளராமை போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் இதனை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அறிவுத்திருக்கோயிலின்கோட்பாடுகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மாற்றங்களை காண முடிகிறது
கிருஷ்ணகுமார், இயக்குனர், ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள். திண்டுக்கல்: எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்குஅறிவுத் திருக்கோயிலில் அளிக்கப்படும் பயிற்சிகள் பெரிதும் உதவுகிறது. கடவுளை நினைத்தால் மட்டும் போதாது அவர்அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். இறைவன் உங்களுக்குள் இருக்கிறார். உற்சாகம் குறைந்தால் உடல் வலிமை குறைந்து விடும். அதற்கு மனதை சரியாகவைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மனவளக்கலை பயிற்சி முக்கியமானது. பயிற்சிக்கு பின் மாணவர்களிடம் நிறைய மாற்றங்களை காண முடிகிறது.
நல்லொழுக்கத்தின் முழு வடிவம்
ராமசந்திரன், பேராசிரியர், பட்டி மன்ற பேச்சாளர்: உணவு அதிகமாகும்போது கூட அது எதிர்வினையாற்றி விடும். அதேபோல் ஆடம்பரத்தை மகிழ்ச்சி என நினைக்கின்றனர்.ஆனால் இவையெல்லாம் நிரந்தர மகிழ்ச்சி அல்ல . தியானம், மவுனம் போன்றவற்றை மேற்கொள்கிற போதுதான் நிரந்தரமகிழ்ச்சியை உணர முடியும். படிக்க, படிக்க புத்தகங்களில் எப்படி புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கிறதோ அதேபோல் தியானம்செய்யும்போது பெரும் அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. மனசு சுத்தம் என்பது தான் மந்திரம். வளம் உள்ள மனம்தளராது. மனது தான் மாற்றத்தை ஏற்படுத்தும். நல்லொழுக்கத்தின் முழு வடிவம் மனவளக்கலை பயிற்சியே.
மாணவர்களிடம் மாற் றம் தெரிகிறது
சகாயமேரி, தலைமையாரிசியர், புனித பிரன்சிஸ் சேவியர் பள்ளி: புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியின் மாணவர்கள் அனைவருக்கும் மனவளக்கலை பயிற்சியான யோகா, தியானம் உள்ளிட்டவற்றை அறிவுத்திருக்கோயிலின் வாயிலாக கற்றுக் கொடுத்தோம். அதற்கான விருது வழங்கப்பட்டது. 500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் இந்த பயிற்சியினை மேற்கொண்டனர். அவர்களிடம் நல்ல மாற்றம் தெரிந்ததை பார்க்க முடிகிறது. அறிவுத்திருக்கோயிலின் இந்த சேவை மேலும் தொடர வேண்டும்.