UPDATED : ஜூலை 02, 2026 07:16 PM
ADDED : ஜூலை 02, 2026 07:17 PM
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பேட்டி:
இந்த ஆண்டு, ஏழு புதிய கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. தனியார் கல்லூரிகள், மாணவர்களிடம் நன்கொடை என்ற பெயரில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, தெரிவித்துள்ளோம். கடந்த காலங்களில், ஒவ்வொரு கல்லூரியிலும் கணிசமான இடங்களை, அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அதன் வழியே, மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்துள்ளது. கலந்தாய்வு பணிகள் நிறைவடைந்த பின், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஒரு நிலையான வழிகாட்டுதல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் பல பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். உதவி பேராசிரியர் போட்டித் தேர்வு விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம், விளக்கம் கேட்கப்பட்டது. அதன்படி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவி பேராசிரியர் போட்டித் தேர்வு தொடர்பாக, அமைச்சர் சில கருத்துகளை கூற முன்வந்த போது, உயர்கல்வித்துறை செயலர் அருண்ராய், அவரது கையை பிடிக்க, அமைச்சர் சுதாரித்து, அந்த பிரச்சனை தொடர்பான பேச்சை நிறுத்திக் கொண்டார்.
