துணைவேந்தர் நியமனத்தில் சுமுக தீர்வு: அமைச்சர்களுக்கு கவர்னர் அறிவுரை
துணைவேந்தர் நியமனத்தில் சுமுக தீர்வு: அமைச்சர்களுக்கு கவர்னர் அறிவுரை
UPDATED : ஜூலை 02, 2026 07:15 PM
ADDED : ஜூலை 02, 2026 07:16 PM
சென்னை:
துணை வேந்தர் நியமனம் தொடர்பான பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண, புதிய திட்டத்துடன் வருமாறு, தன்னை சந்தித்த அமைச்சர்களிடம், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை, மதுரை காமராஜர், கோவை பாரதியார், சென்னை பல்கலை உட்பட, 12 பல்கலைகளில், துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
கடந்த தி.மு.க., ஆட்சியில் கவர்னராக இருந்த ரவிக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால், பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, துணை வேந்தர் நியமன பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண முயற்சித்து வருகிறது. இச்சூழலில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை, சமீபத்தில் சந்தித்தனர்.
அப்போது, 12 பல்கலைகளில் துணை வேந்தர் இல்லாததால், பல்கலை நிர்வாகம், உயர்கல்வி பாதிக்கப்படுவது பற்றி, அமைச்சர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதை ஏற்றுக் கொண்ட கவர்னர், 'சட்டத்தை மீறி எதையும் செய்ய முடியாது. துணை வேந்தர் தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி இருக்க வேண்டும் என்பது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. அதை மீற முடியாது' என, கூறியுள்ளார்.
'துணை வேந்தர் நியமனத்தில், முந்தைய கவர்னர் பின்பற்றிய நடைமுறையை ஏற்றுக் கொண்டால், மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துவிட்டார் என, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும்.
'எனவே, சிலவற்றை விட்டுக்கொடுத்து சுமுக தீர்வுக்கு முன்வர வேண்டும்' என, கவர்னரிடம் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
அமைச்சர்கள் கூறியதை பொறுமையாக கேட்டுக் கொண்ட கவர்னர், 'சுமுக தீர்வு காண என்னென்ன செய்யலாம், எதை விட்டுக் கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து, புதிய திட்டத்துடன் வாருங்கள்; பேசி தீர்ப்போம்' என கூறியதாக, தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
