அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் பணியிடத்தை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் அமைச்சர்கள் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் பணியிடத்தை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் அமைச்சர்கள் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 09:50 AM

விருதுநகர் :
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் பணியிடத்தில் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்காமல் நிரந்தரமாக நியமிக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க மாவட்டத்தின் இரு அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் 640 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டு நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது.
அரசு மருத்துவக்கல் லுாரியில் தற்போது 600 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மகப்பேறு உள்ளிட்ட துறைகளில் எம்.எஸ்., எம்.டி., படிப்புகள் துவங்கப்படவுள்ளது.
இந்நிலையில் விருது நகர் அரசு மருத்துவக் கல்லுாரியில் தற்போது கல்லுாரி துணை முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் பொறுப்பு அதிகாரியை தற்காலிக துணை முதல்வராக நியமித்து கல்லுாரி பணிகளை செய்ய வேண்டிய நிலையே தொடர்கிறது.
கல்லுாரியில் மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், நிர்வாகத்தில் வரக்கூடிய சிக்கல்களை கையாளுவதற்கு நிரந்தர துணை முதல்வர் இருக்க வேண்டும். ஆனால் பணியிடம் காலியாக இருப்பதால் மருத்துவக் கல்லுாரிக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. இதனால் மருத்துவ மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் நான்கு வழிச் சாலையை ஆபத்தான முறையில் கடந்து எதிரே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு செல்கின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக வந்து விடுதிகளில் தங்கியுள்ள மாணவர் களுக்கு உள்ள குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவும், கல்லுாரி, விடுதிகள், குடியிருப்புகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கு தேவையான பணிகளை துவங்கவும் துணை முதல்வர் பணியிடம் அவசியமாக உள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களும் அரசு மருத்துவக் கல்லுாரியில் நிரப்பப்படாத துணை முதல்வர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.