தொடக்க பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி; மேம்படுத்தப்பட்ட கல்விக்கு அடித்தளம்
தொடக்க பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி; மேம்படுத்தப்பட்ட கல்விக்கு அடித்தளம்
UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 09:52 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 98 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஹடெக் லேப், 305 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நவீன முறையிலான கல்வி கற்பிக்கும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கவும், இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் இது போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தது.
தற்போது, நடுநிலைப் பள்ளிகளிலும் ைஹடெக் லேப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 98 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ைஹடெக் லேப், 305 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு தொடக்கப்பள்ளிகளில் தற்போது மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. பாடம் கற்பதுடன் அவற்றை கியூ.ஆர்., கோடு வாயிலாக வீடியோவாக பார்வையிடும் தொழில்நுட்பமும் உள்ளது.
ஆசிரியர்கள் மொபைல்போன், லேப்டாப் வாயிலாக மாணவர்களுக்கு காண்பித்து வந்தனர். இதனால், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களும் சரிவர பார்வையிடாத நிலை இருந்தது. தற்போது, ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மாணவர்கள் பெரிய திரையில் ஒலி, -ஒளி அமைப்புகளோடு கூடிய, கற்றல் கற்பித்தல்களை மேற்கொள்வதற்கும், கற்றலில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நவீன வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. நகர் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும்.
இவ்வாறு, கூறினர்.