சேவா ஆசிரம குழந்தைகளுக்கு அறநெறி, நன்னெறி பயிற்சி வகுப்பு
சேவா ஆசிரம குழந்தைகளுக்கு அறநெறி, நன்னெறி பயிற்சி வகுப்பு
UPDATED : ஏப் 25, 2026 01:08 PM
ADDED : ஏப் 25, 2026 01:08 PM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையத்தில், ஆசிரம குழந்தைகளுக்கு அறநெறி மற்றும் நன்னெறி பயிற்சி வகுப்புகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள ஜீவகாருண்ய சேவா ஆசிரம விடுதியில் தங்கி படித்து வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நடப்பாண்டுக்கான அறநெறி மற்றும் நன்னெறி வகுப்புகள் நடந்தன.
நிறைவு விழா நிகழ்ச்சியில், ஆசிரம நிர்வாகி செல்வராஜன் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நன்னெறி வகுப்புகளில், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மாணவர்கள் விளக்கினர்.
“வளமான மற்றும் வலிமையான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால், இன்றைய குழந்தைகளுக்கு, அறநெறி மற்றும் நன்னெறி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்,” என, திருக்குறளை மேற்கோள் காட்டி, திருக்குறள் கணேசன் விளக்கினார்.
ஒழுக்கத்துக்கும், கல்விக்கும் உள்ள தொடர்பை விளக்கிய கோவை கேலக்ஸி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஸ்ரீதர், “தற்போது மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் தேவை. அதற்கு இது போன்ற அறநெறி மற்றும் நன்னெறி கல்வி உதவும்,” என்றார்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சரசு மற்றும் ரோட்டரி சமுதாய குழு உறுப்பினர்கள் தாமோதரன், பரிமளம், கவிரத்னா, முத்து கதிரவன் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சி நிறைவு செய்த, 25 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்திருந்தார்.
