பல வண்ணங்களில் பறை இசை கருவி; புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்
பல வண்ணங்களில் பறை இசை கருவி; புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்
UPDATED : பிப் 04, 2026 10:47 AM
ADDED : பிப் 04, 2026 10:49 AM

சென்னை:
சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், விலங்கின் தோலை பயன்படுத்தி, பல வண்ணங்களில், பறை இசை கருவிக்கான தோல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பெரும்பாலும் பறை இசை கருவி உள்ளிட்ட தாள வாத்திய கருவிகளுக்கு, எருமை மாட்டின் தோல் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, மாட்டில் இருந்து எடுக்கப்படும் தோலை காய வைத்து, அதிலிருக்கும் முடியை கையால் எடுத்து விட்டு, மரச்சட்டத்தின் மேல் போர்த்தி, இறுக்கமாக கட்டி விடுகின்றனர்.
இதனால், பறை இசை கருவிகள் கருமை நிறத்தில் காணப்படுகின்றன; தோல் வாடையும் அடிக்கிறது. அந்த இசை கருவிகளை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ண கலவை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, பல வண்ணங்களில் பறை இசை கருவி உட்பட பல்வேறு இசை கருவிகளுக்கான தோலை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, சென்னை கிண்டியில் உள்ள சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து, சி.எல்.ஆர்.ஐ., விஞ்ஞானி சதீஷ் கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள பறை இசை கருவிகள், மாட்டின் தோலில் இருந்து கைகளால் முடியை அகற்றி தயாரிக்கப்படுகிறது. இதற்கு, ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். இசை கருவியின் மீது முடி காணப்படுவதுடன், சில நாட்களில் பூஞ்சைகளும் வளர்கின்றன.
பறை இசை கருவிகளின் தரத்தை அறிவியல் பூர்வமாக மேம்படுத்த, சி.எல்.ஆர்.ஐ., மூத்த விஞ்ஞானி மதன் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், இயற்கைக்கு உகந்த வண்ண பொருட்கள் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தில் தோல் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த தோலை பயன்படுத்தி, பல வடிவங்களில் பறை இசை கருவிகளை உருவாக்கலாம். தவில், செண்டை மேளத்திலும் பயன்படுத்தலாம். ஒலியின் நாதம் மாறாது. தாங்கள் விரும்பும் வண்ணத்தில் தோலை உருவாக்கலாம். பச்சை தோல் வாடை வராது.
பல வண்ணங்களில் பறை இசை கருவிகளை, ஒரே நாளில் உருவாக்கலாம். இந்த தோலை பயன்படுத்தும் தொழில்நுட்பம், 'இன்பினிட்டி' என்ற தோல் இசை கருவிகளை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

