UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 11:02 AM

கோவை:
கோவை வேளாண் பல்கலையில், உலகளாவிய நானோ கனெக்ட் இரண்டு நாள் மாநாடு நேற்று துவங்கியது.
வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறைகளில் நானோ தொழில்நுட்பத்தின் நிலை, உணவு அமைப்புகள், பூச்சிகள், நோய்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
மாநாட்டில், பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:
வேளாண் துறை சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்தில், 2010ம் ஆண்டிலேயே, வேளாண் நானோ தொழில்நுட்பத்துக்கான பிரத்யேக மையத்தை நிறுவிய இந்தியாவின் முதல் வேளாண் பல்கலை, தமிழ்நாடு வேளாண் பல்கலைதான்.
விளை நிலப்பரப்பு குறைதல், நீர் பற்றாக்குறை, விவசாயத்தை விட்டு மக்கள் வெளியேறுதல், உர பயன்பாடு, மகசூல் போன்றவற்றில் உள்ள சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தின் வாயிலாக தீர்வு காண ஆய்வுகள் நடக்கின்றன.
பல்கலையின் நானோ ஆய்வு மையம், ஏராளமான ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு, 10க்கு மேற்பட்ட நானோ தொழில்நுட்பங்கள், 2 காப்புரிமைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட உயர் தாக்க காரணி வெளியீடுகளை உருவாக்கியுள்ளது. நானோ உர பயன்பாட்டிலும் பெரும் பங்கு வகித்துள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன, துணை இயக்குனர் ஜெனரல் (இயற்கை வேளாண்மை), சுரேஷ் குமார் பேசுகையில், “வரும் காலங்களில் உரங்களை மிச்சப்படுத்துவது, இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்தல், களை, பூச்சி, பூஞ்சைக் கொல்லிகள், பயோ ஸ்டிமுலண்டுகள் உள்ளிட்டவற்றில் நானோ தொழில்நுட்பம் பெரும் பங்களிப்பைத்தரும்” என்றார்.
ஐ.சி.ஏ.ஆர்., உதவி இயக்குநர் ஜெனரல் வேல்முருகன், வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், இயற்கை வள மேலாண்மை மைய இயக்குனர் பாலசுப்பிரமணியம், நானோ தொழில்நுட்பமைய தலைவர் கோமதி மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.