அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 09:08 AM

நாமக்கல்:
நாமக்கல்லில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் படிக்கும், 25 மாணவ, மாணவியருக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கப்பட்டது.
தேசிய தேர்வு முகமை மூலம் இளநிலை மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது. நடப்பாண்டு, நீட் தேர்வு மே, 5ல் நடக்கிறது.
இந்த தேர்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர் எளிதாக மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் தங்கி படித்த, 25 மாணவ, மாணவியர், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான பயிற்சி வகுப்பு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம், நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆதி திராவிட நலத்துறை அலுவலர் முருகன், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.