UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 12:27 PM

கோவை:
நீட் தேர்வுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2024 - 2025 ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5 ம் தேதி நேரடி முறையில் நடக்கவுள்ளது.
2023--24 ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, மாவட்டம்தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் சி.சி.எம்.ஏ. பள்ளி, பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் ஜி.ஹெச்.ஹெச்.எஸ். ஆண்கள் பள்ளி என மூன்று பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நீட்தேர்வினை 371க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். 250க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வினை எளிதாக எழுதும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மூன்று மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், மே 5 ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.