UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 05:24 PM
புதுடில்லி:
தேர்வுக்கு முன்பே, நீட் வினாத்தாள் வெளியானதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடந்தது. முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது.
தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சில மாணவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, வெளியான முடிவுகளை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடும்படி, 10 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வுக்கான கலந்தாய்வை ரத்து செய்யும்படி மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். கலந்தாய்வு தொடர்ந்து நடக்கும் என்றும் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது. இதற்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, மத்திய அரசு மற்றும் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
இந்த வினாத்தாள் லீக் பீஹாரில் நடந்ததாக கூறப்படுவதால், அம்மாநில அரசும் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.