பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு கட்டணம் அதிகரிக்க கோரிக்கை
பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு கட்டணம் அதிகரிக்க கோரிக்கை
UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 05:07 PM
பெங்களூரு:
கர்நாடகாவில் தனியார் பொறியியல் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்த கோரி, தனியார் கல்லுாரிகள் சங்கத்தினர், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் 10 - 15 சதவீதம் கட்டணம் உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் 19 அரசு பொறியியல் கல்லுாரிகளும்; 147 தனியார் பொறியியல் கல்லுாரிகளும் உள்ளன. கடந்தாண்டு உயர்கல்வி துறை துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், '2023 - 24ம் கல்வியாண்டில், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தினார்.
இதன் வாயிலாக, மைசூரு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு 40,100 ரூபாயும்; விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லுாரி பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு முதலாம் ஆண்டு 45,000 ரூபாயும், அதற்கடுத்த ஆண்டுகள் 43,500 ரூபாயும்; விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு முதல் ஆண்டு 40,110 ரூபாயும், அதற்கடுத்த ஆண்டுகள் 22,260 ரூபாயும் கட்டணமாக, கர்நாடக தேர்வு ஆணையம் நிர்ணயித்தது.
அதே நேரம், தனியார் பொறியியல் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, துறைகளுக்கு ஏற்ப, 69,214 ரூபாயில் இருந்து 76,905 ரூபாயாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழக கல்லுாரிகள், 1.69 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து வருகின்றன.
இந்நிலையில் நடப்பாண்டு கடந்த சில நாட்களுக்கு முன் சி.இ.டி., எனப்படும் பொது நுழைவு தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால் அரசு ஒதுக்கீட்டில், இவர்களுக்கு சுலபமாக சீட் கிடைத்துவிடும்.
எதிர்காலத்தில் தேவை அதிகம் உள்ள துறைகளை மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள், பெங்களூரில் பிரபலமான பொறியியல் கல்லுாரிகளில் சேர முயற்சித்து வருகின்றனர்.
இதை உணர்ந்த சில தனியார் கல்லுாரிகள், 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதனால், ஆறு முதல் 10 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
இந்நிலையில், தனியார் கல்லுாரிகள் சங்கத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர், அதில், 'தனியார் பொறியியல் கல்லுாரிகளில் கடந்த ஆண்டு 7 சதவீதம் மட்டுமே கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. இதனால் கல்லுாரிகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது.
'எனவே நடப்பாண்டு தனியார் பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும், காமெட் - கே மூலம் சேரும் மாணவர்களின் கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்று, கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.