புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; கணக்கெடுப்பு துவக்கம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; கணக்கெடுப்பு துவக்கம்
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:47 AM

கோவை:
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி, கோவையில் துவங்கியது.
கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பிதற்காக மத்திய அரசால், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022ல் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேலானவர்களைக் கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த கணக்கெடுக்கும் பணி இன்று முதல் துவங்கவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணி நடத்தப்படவுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஆயிரத்து 336 மையங்களில், ஆயிரத்து 336 தன்னார்வலர்கள் மூலமாக 5 ஆயிரத்து 65 ஆண்கள், 14 ஆயிரத்து 22 பெண்கள் என 19 ஆயிரத்து 87 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் கோவை மாவட்டத்தை, 100 சதவீத எழுத்தறிவித்தல் மாவட்டமாக அறிவிக்கும் நோக்கில், கணக்கெடுப்பு பணி இன்று முதல் நடத்தப்படவுள்ளது. அதன்படி, எழுத, படிக்க தெரியாதவர்களை கண்டறிதல், தன்னார்வலர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகள் மே 24ம் தேதிக்குள் முடிக்கப்படும். பின்னர், 20 பேருக்கு ஒரு மையம் அமைத்து, எழுத, படிக்க 200 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.