UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:45 AM

பாலக்காடு:
இடி, மின்னல் பற்றி அறிந்து கொள்ள, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தாமினி மொபைல் செயலி மக்கள் இடையே பிரபலமாகியுள்ளது. மாநில மொழிகளில் வடிவமைத்துள்ள இந்த செயலியை, இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மின்னலின் சரியான இடம் மற்றும் இருக்கும் இடத்தின் அடிப்படையில், 40 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் மின்னல் வர வாய்ப்பு உள்ள பகுதிகளும், அதன் அசைவு மற்றும் திசையை இந்த செயலியில் அறியலாம்.
இருக்கும் இடத்தின், 20 கிலோமீட்டர் சுற்றளவில் மின்னலுக்கு வாய்ப்பிருந்தால், 45 நிமிடங்களுக்கு முன், இந்த செயலி எச்சரிக்கை செய்யும். இடியுடன் கூடிய மழையின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநில மொழிகளில் மின்னல் பற்றிய சில பொதுவான தகவல்களை தாமினி செயலி வழங்குகிறது.
இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் இந்த செயலியை வெளியிட்டு உள்ளன. புனேயில் உள்ள ஐ.ஐ.டி.எம்., மத்திய செயலாக்க அலகு உடன் இணைத்து, ஜி.பி.எஸ்., உதவியுடன், நாட்டில் 48க்கும் அதிகமான மையங்களில் உள்ள லைட்டனிங் லொகேஷன் பயன்படுத்தி இந்த செயலி செயல்படுகிறது.
கடந்த, 2018 நவ., மாதம் இச்செயலி வெளியிடப்பட்டு இருந்தாலும், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டதால் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செயலியை, இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
மின்னல் எச்சரிக்கையை வழங்கும் பல தனிப்பட்ட மொபைல் செயலிகள் தற்போதுள்ளன.
அதில் சில உலகளவில் இயங்கும், 2015ல் வெளியான லைட்டனிங் அலாரம் வெதர்பிளாசா (lightening alarm weather plaza) செயலியில், 10 லட்சம் பயனர்கள் உள்ளனர். 2012ல் வெளியான 'வெதர் ஆண்ட் ரேடார்- ஸ்ட்ரோம் அலெர்ட்ஸ் (weather and radar strom alerts) நூறு மில்லியன் பயனர்கள் உள்ளனர். 2016-ல் வெளியான தண்டர் ஸ்டோம் வெதர்வானிங் (thunder strom whether warning) ஒரு லட்சம் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.