UPDATED : ஜன 01, 2026 08:43 PM
ADDED : ஜன 01, 2026 08:45 PM

'நாட்டின் உண்மையான வளர்ச்சியை அறிய , புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம்,' என கவர்னர் ரவி தெரிவித்தார்
இந்திய பொருளாதார சங்கத்தின் நூற்று எட்டாம் ஆண்டு மாநாடு, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த மாதம் இருபத்து ஏழில் துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
மாநாட்டை, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் மகேந்திர தேவ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இச்சங்கத்தின் நான்காவது 'கவுடில்யா' விருது , வேல்ஸ் கல்வி குழுமம் மற்றும் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷுக்கு வழங்கப்பட்டது.
கல்வி, தலைமுறை வளர்ச்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கவர்னர் ரவி பேசியதாவது:
கடந்த பத்தொன்பதாம் நுாற்றாண்டு துவக்கத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தோம். காலனித்துவ ஆட்சி காலத்தில் நம் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். விரைவில், மூன்றாம் இடத்தை அடைவோம். கடந்த பத்து ஆண்டுகளில், இருபத்து ஐந்து கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சாதனைகள் உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை வேண்டாம். அது சரியான பாதையில் பயணிக்கிறது. நாம் மேற்கத்திய நாடுகள் வகுத்த அளவுகோல்களை வைத்து, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுகிறோம். ஜி.டிபி., வேலைவாய்ப்பு ஆகியவை மட்டுமே அளவு கோல்களாக உள்ளன. மத்திய அரசின் 'முத்ரா' கடன் திட்டத்தால், நாட்டில் ஐம்பத்து இரண்டு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை, முப்பத்து மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், இருபத்து ஐந்து லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி என்பது வருமானம் மட்டும் கிடையாது. குடிநீர், மின்சாரம், வீடு, கழிப்பறை, சுகாதாரம், காப்பீடு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் பகுதிகள்தான். நாட்டின் புதிய பொருளா தார வளர்ச்சியை புரிந்துகொள்ள, புதிய பொருளா தார கோட்பாடுகள் அவசியம். உண்மையான தரவுகளை சேகரித்து, புதிய பொருளாதார மொழியை உருவாக்குவது, இன்றைய பொருளாதார அறிஞர்களின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

