புதிய கண்டுபிடிப்பு, தரநிலைக்கு வலு - பிஐஎஸ் நடத்திய புத்தொழில் நிறுவனங்கள் சந்திப்பு
புதிய கண்டுபிடிப்பு, தரநிலைக்கு வலு - பிஐஎஸ் நடத்திய புத்தொழில் நிறுவனங்கள் சந்திப்பு
UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 10:14 AM
 சென்னை:
 புதிய கண்டுபிடிப்பு மற்றும் தரநிலைகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை, ஸ்ரீ சாயிராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாயிராம் டெக்னோ இன்குபேட்டர் பவுண்டேஷன் இணைந்து, பிஐஎஸ் - புத்தொழில் நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது.
புத்தொழில் நிறுவனங்கள், கல்வித்துறை மற்றும் தேசிய தரநிலை அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, வளர்ச்சி பயணத்தில் தரநிலைப்படுத்தல் மற்றும் தரநிர்ணய நடைமுறைகளை ஒருங்கிணைக்க உதவுவது இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
பிஐஎஸ் தென் மண்டல தலைமை துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், தேசிய தரநிலைகளை உலகளாவிய தரங்களுடன் இணைத்தல், சுழற்சிப் பொருளாதார முறையில் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிஐஎஸ் முயற்சிகளை விளக்கினார். தரநிலைப்படுத்தல் மற்றும் மேலாண்மை அமைப்புச் சான்றிதழ்கள் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், புத்தொழில் நிறுவனங்களுக்கும் தயாரிப்பு தரத்தை உயர்த்த, போட்டித்திறனை மேம்படுத்த, ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் எனவும் அவர் கூறினார்.
பிஐஎஸ் கோயம்புத்தூர் கிளை தலைவர் திருமதி ஜி. பவானி, இத்தகைய சந்திப்புகள் புத்தொழில் நிறுவனங்களை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்துவதோடு, உலகளாவிய போட்டியில் முன்னிலைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநர், தொடக்கத்திலிருந்தே தரநிலைகளை பின்பற்றுவது நம்பகத்தன்மையும் வாடிக்கையாளர் நம்பிக்கையும் பெற உதவும் என்றார்.
ஸ்ரீ சாயிராம் பொறியியல் கல்லூரி மாணவர் நலத்துறை டீன் டாக்டர் ஏ. ராஜேந்திர பிரசாத், ஸ்ரீ சாயிராம் டெக்னோ இன்குபேட்டர் பவுண்டேஷன் இயக்குநர்  நரேஷ் ராஜ், சாயிராம் இன்ஸ்டிட்யூஷன்ஸ் தலைவர் டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து, பிஐஎஸ் விஞ்ஞானி திரு சந்தன்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

