புதிய தேசிய கல்வி கொள்கை தான் நமது எதிர்காலம்: கவர்னர் ரவி
புதிய தேசிய கல்வி கொள்கை தான் நமது எதிர்காலம்: கவர்னர் ரவி
UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 05:54 PM

ஊட்டி:
அனைத்து துறைகளிலும் மாற்றம் மலர வேண்டும் என்றால், கல்வியில் மாற்றங்கள் வர வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கை தான் நமது எதிர்காலம் என துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில் குறிப்பிட்டார்.
ஊட்டி ராஜ்பவனில் ஆண்டு தோறும் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. பல்கலை., துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டை இன்று (மே 27) கவர்னர் ரவி துவங்கி வைத்தார். 7 தனியார் பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் குறித்து விரிவாக, இந்த மாநாட்டில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு மாற்றத்திற்கு தயாராக உள்ளது
மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத்தில் இருந்த நாம், 11ம் இடத்திற்கு பின்தங்கிவிட்டோம். தற்போது, 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3வது இடத்திற்கு முன்னேற உள்ளோம்.
தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வியில், இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால், அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும்.
புதிய இந்தியா
நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.