யு.ஜி.சி., நெட் தகுதி தேர்வு புதிய பாடங்கள் சேர்ப்பு
யு.ஜி.சி., நெட் தகுதி தேர்வு புதிய பாடங்கள் சேர்ப்பு
UPDATED : மே 01, 2026 11:04 AM
ADDED : மே 01, 2026 11:05 AM
சென்னை:
யு.ஜி.சி., நெட் தகுதித் தேர்வில், புதிதாக புள்ளியியல் மற்றும் வனவியல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியராக பணியாற்ற, இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெற, பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக, 'யு.ஜி.சி., நெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, ஜூன் 22 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கு, வரும் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக, யு.ஜி.சி., நெட் தேர்வில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்பாடங்கள், வரலாறு, அரசியல் அறிவியல் உட்பட 85 பாடங்களில், விருப்ப பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும். இந்நிலையில் நடப்பாண்டு முதல், விருப்ப பாடத் தேர்வில், புள்ளியியல் மற்றும் வனவியல் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பாடங்களை, முதன்மை பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களும், யு.ஜி.சி., நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
