இந்திய முறை மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய முறை மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 10:37 AM

சென்னை:
இந்திய முறை மருத்துவத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையில், 110 அறிவிப்புகள், இந்தாண்டு செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. அதில், மூன்று அறிவிப்புகள் இன்றே செயலாக்கத்திற்கு வருகின்றன. அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய முறை மருத்துவத்தில், அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் பொறியியல் துறையின் வாயிலாக, புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள, சென்னை ஐ.ஐ.டி.,யுடன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதேபோல், ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மத்திய கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதில், இந்திய முறை மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகளின் தரத்தை அறிவதற்கும், ஆயுர்வேத அறிவியல் மத்திய ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
சித்தா மருந்துகள் எதன் எதன் வாயிலாக, எந்தந்த அளவுகளில் கலப்பு செய்யப்படுகிறது; அதை செய்வதற்கு எந்த வகையான யுக்திகள் கையாளப்படுகின்றன; எந்த மாதிரியான, மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன போன்றவற்றை, ஒரு புத்தகமாக உருவாக்கியுள்ளனர். அந்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொன்மையான தமிழ் மருத்துவ இலக்கியங்களையும், தமிழ் வழியிலான மருத்துவத்தையும், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மத்திய யுனானி மருத்து வம் மற்றும் மத்திய ஆராய்ச்சி மையத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்திய முறை மருத்துவத் துறை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.