UPDATED : ஜன 13, 2026 08:55 PM
ADDED : ஜன 13, 2026 08:58 PM

கீழடி: கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தை நேற்று திருச்சி என்.ஐ.டி., கல்லுாரி கட்டட பிரிவு மாணவ மாணவியர் பார்வையிட்டனர்.
கீழடி அகழாய்வில் பண்டைய கால சுடுமண் பொருட்களுடன் செங்கல் கட்டடங்களும், சுடுமண் பானைகளும் அதிகளவில் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு கால கட்டத்தில் கண்டறியப்பட்ட அகழாய்வில் வெவ்வேறு விதமான கட்டடங்கள் கண்டறியப்பட்டன.
தற்போதைய தொழில்நுட்ப நேர்த்தி 2600 ஆண்டுகளுக்கு முன்பே தென்பட்டது கட்டடப்பிரிவு சம்பந்தமாக பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆய்விற்கான வழிகாட்டலாக கருதப்படுகிறது.
திருச்சி என்.ஐ.டி., கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் முதலாமாண்டு மாணவ மாணவியர்களை அழைத்து வந்து கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள கட்டடங்கள், சுடுமண் பொருட்கள் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.
நேற்று பேராசிரியை சங்கீதா தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவ, மாணவியர்கள் கீழடி தொல் பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டதுடன் கட்டடங்கள் சம்பந்தமான குறிப்புகளையும் நகலெடுத்தனர்.
மாணவ, மாணவியர்கள் கூறுகையில், கீழடி 2600 ஆண்டுகளுக்கு முந்தையது, அதே போல ஆதிச்சநல்லூர், சிவகளை மூவாயிரம் ஆண்டு களுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பயன்படுத்தியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றனர்.

