சிறப்பு வகுப்பு நடத்த வழிகாட்டுதல் இல்லை; ஆசிரியர்கள் குழப்பம்
சிறப்பு வகுப்பு நடத்த வழிகாட்டுதல் இல்லை; ஆசிரியர்கள் குழப்பம்
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 08:21 AM

உடுமலை:
பொதுத்தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு, விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வரும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கு மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னோட்டமாக, அரையாண்டு தேர்வு நடந்தது.
தற்போதுஅரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கியுள்ளது. அரையாண்டுதேர்வுக்கு பாடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால், அடுத்து பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, ஆசிரியர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில், பொதுத்தேர்வுக்கு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் கல்வித்துறையின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும்.
நடப்பாண்டில், விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா இல்லையா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தயார்படுத்துவதற்கு, விடுமுறை நாட்களை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களும் தயங்குகின்றனர். சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, கல்வித்துறை தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டுமென, அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதில் அரசும் தலையிட்டு தீர்வு காண ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.