உள்ளடக்கிய கல்வி முறை இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிப்பு
உள்ளடக்கிய கல்வி முறை இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிப்பு
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 08:19 AM

ராமநாதபுரம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழி நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி பயிற்சி இணைய வழியில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கான இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் முறை தான் உள்ளடக்கிய கல்வி முறையாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப்போல் வழி நடத்த ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் உள்ளடக்கிய கல்விக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி டிச.14 முதல் ஜன.10 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்டங்கள் முடித்த பின் அடுத்த கட்டங்களுக்கு ஆசிரியர்கள் செல்லலாம்.
பயிற்சி நிறைவு செய்த பின் ஆசிரியர்கள் எல்.எம்.எஸ்., என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தால் பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
இதற்காக எமிஸ் தளத்தில் உள் உழைந்து ஆசிரியர்கள் தங்கள் பயனர் கணக்கு மூலம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் இந்த பயிற்சிக்காக நுழைவதால் இணையதள இணைப்பு கிடைக்கமால் தவிக்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த இணையதள பிரச்னையை சரி செய்து ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.