முதல்வர் இல்லாத பி.எட்., கல்லுாரிகள்: கல்வியியல் பல்கலை கணக்கெடுப்பு
முதல்வர் இல்லாத பி.எட்., கல்லுாரிகள்: கல்வியியல் பல்கலை கணக்கெடுப்பு
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 04:14 PM

சென்னை:
முதல்வர்கள் இல்லாத பி.எட்., கல்லுாரிகளின் விபரங்களை சேகரிக்க, கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், 600க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளும் உள்ளன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
கல்வித்தகுதி
தேசிய கல்வியியல் கவுன்சிலின் உத்தரவின்படி, அனைத்து பி.எட்., கல்லுாரிகளிலும், முதுநிலை மற்றும் பிஎச்.டி., முடித்தவர்கள், முதல்வர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பல கல்லுாரிகள் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்களை முதல்வர்களாகவும், பொறுப்பு முதல்வர்களாகவும் நியமித்துள்ளன.
சில இடங்களில், ஏற்கனவே ஒரு கல்லுாரியில் முதல்வராக இருப்பவரை, ஆவணங்கள் அடிப்படையில், மற்றொரு கல்லுாரிக்கும் முதல்வராக காட்டியுள்ளனர்.
இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகளில் முதல்வராக இருப்பவர்கள்; சரியான கல்வித் தகுதி இல்லாத முதல்வர்கள் விபரங்களை அறியவும், முதல்வரே இல்லாத கல்லுாரிகளை கண்டறியவும், கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உத்தரவு
இதற்காக, ஒவ்வொரு கல்லுாரியிலும் முதல்வராக உள்ளவர்களின் பெயர், கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கும் பணியை, கல்வியியல் பல்கலை துவங்கியுள்ளது. கல்லுாரி வாரியாக முதல்வர்களின் அனைத்து விபரங்களையும், வரும் 30ம் தேதிக்குள் அனுப்புமாறு, கல்லுாரிகளுக்கு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.