UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 05:12 PM
சென்னை:
சென்னையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியில் விடுபட்டவர்களுக்கு, மூன்று இடங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும், 19,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, 16 இடங்களில் பயிற்சி வகுப்பு, 24ம் தேதி நடந்தது. இதில், 1,400க்கும் மேற்பட்டோர் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை. அவ்வாறு பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, வடசென்னையில், வியசார்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியிலும், மத்திய சென்னையில், பிரகாசம் சாலையில் உள்ள அரசு மகளிர் பாரதி கலை கல்லுாரியிலும், தென் சென்னையில், விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லுாரியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார்.