நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM
ADDED : ஜூலை 18, 2024 06:25 PM

புதுடில்லி:
நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சுமார் 254 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மறு தேர்வு
விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு இந்த நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். நீட் தேர்வில் குளறுபடி புகார் எழுந்துள்ளதால், கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யவும் முடியாது; அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வை எழுத வேண்டும் என உத்தரவிடவும் முடியாது என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ஒட்டுமொத்த நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தினால் போதும் என்று தான் கேட்கிறோம்'' என்றார். அப்போது குறுக்கிட்ட சந்திரசூட், வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் எனக் கூறினார்.
தேர்வு மையங்கள் வாரியாக ரிசல்ட்
நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) மதியத்திற்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட்டால் தான் நடந்ததை அறிய முடியும் எனக் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22க்கு ஒத்திவைத்தனர்.
சென்னை ஐஐடி அறிக்கை
சென்னை ஐஐடி இயக்குனர் தேசிய தேர்வுகள் முகமையின் ஆட்சி மன்ற உறுப்பினராக இருப்பதால், விசாரணை அறிக்கையில் அவரது பங்களிப்பு சந்தேகத்திற்குகுரியது எனவும், சென்னை ஐஐடி வழங்கி உள்ள விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வை சென்னை ஐஐடி நடத்துவதால் அதன் தலைவர் தேசிய தேர்வுகள் முகமையின் குழுவில் இடம் பெற்று இருப்பார். ஆனால் நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயார் செய்த இயக்குனர் குழுவில் இடம் பெறவில்லை என விளக்கமளித்தார். நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என சென்னை ஐஐடி விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.