UPDATED : மே 27, 2025 12:00 AM
ADDED : மே 27, 2025 03:48 PM
திருச்சி:
தமிழகத்தில், இண்டி கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது, என காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
திருச்சி புத்துார் நால்ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட சிவாஜி சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டதை, புரிதல் இன்றி சிலர் விமர்சிக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து உரிய வரி பங்கீட்டை அளிக்காமல், தமிழகம் மீது வன்மமாக நடந்து கொள்கிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகின்றனர். இது சர்வாதிகாரம். மத்தியில் காங்., ஆட்சி இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம் ஒன்றை, தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி ஏற்க முடியாது என உறுதிபட தெரிவித்தார். உடனே, அப்போதைய காங்., ஆட்சி, தமிழகத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்தவில்லை.
காங்., தேச பக்தர்களை கொண்ட கட்சி. ஆனால், பா.ஜ., தேசத்தை கொள்ளை அடிக்கும் கட்சி. ஈ.வெ.ரா., ஜாதி அடையாளம் துறந்தவர். ஆனால், அவர் மீது ஜாதி சாயம் பூசி, தமிழகத்தை கலவர பூமியாக்க சிலர் நினைக்கின்றனர்; அதெல்லாம் இந்த மண்ணில் நடக்காது.
காங்., தலைமையிலான இண்டி கூட்டணியை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. இரும்பு கோட்டையாக இருக்கும் இண்டி கூட்டணியை, உடைக்கலாம் என யாரும் பகல் கனவு காண வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.