தேசிய கல்வி கொள்கைக்கு தி.மு.க., அரசு மறைமுக ஆதரவு
தேசிய கல்வி கொள்கைக்கு தி.மு.க., அரசு மறைமுக ஆதரவு
UPDATED : மே 27, 2025 12:00 AM
ADDED : மே 27, 2025 03:47 PM
சென்னை:
தேசிய கல்விக் கொள்கைக்கு, தி.மு.க., அரசு மறைமுக ஆதரவு அளிக்கிறது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 2020ல், மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, அது மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என்பதால், அதை பா.ம.க., ஏற்கவில்லை.
இதே நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கைக்கு மாறாக, தமிழக சூழலுக்கு பொருந்தும் வகையில், மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என, 2022ல் அறிவித்தது. இதற்காக, நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த 2024 ஜூலை 1ம் தேதி அறிக்கை அளித்தது.
தமிழக அரசு நினைத்திருந்தால், உடனடியாக அந்த அறிக்கையை வெளியிட்டு, மாநில கல்விக் கொள்கையை, இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் புரியவில்லை. உடனடியாக மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை. அதை குப்பையில் தான் போட்டாக வேண்டும்.
மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசிய கல்விக் கொள்கையை, தமிழகத்தில் செயல்படுத்த, மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கும். இப்போதும் தமிழகப் பல்கலைகளில், தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதை பார்க்கும்போது, இந்த சந்தேகம் உறுதியாகிறது. மாநில கல்விக் கொள்கை தொடர்பான விஷயத்தில், தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.