நர்சிங் கல்லுாரி கல்வி கட்டணம்; ஒழுங்குபடுத்த புதிய கமிட்டி
நர்சிங் கல்லுாரி கல்வி கட்டணம்; ஒழுங்குபடுத்த புதிய கமிட்டி
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:54 PM
பெங்களூரு:
நர்சிங் கல்லுாரிகளின் கல்வி கட்டணம் ஒழுங்குப்படுத்த கமிட்டி அமைக்கப்படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், உரிமம் ரத்து செய்யப்படும், என மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
நர்சிங் கல்லுாரிகளில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக, அரசுக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், பெங்களூரு விகாஸ் சவுதாவில், உயர் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்துக்கு பின், அவர் கூறியதாவது:
சில நர்சிங் கல்லுாரிகளில், மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதனால், மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு, பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில், மருத்துவ கல்வி துறை இணை செயலர் தலைமையில், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட, கட்டணம் ஒழுங்குப்படுத்தும் கமிட்டி அமைக்கப்படும்.
நர்சிங் கல்லுாரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை பரிசீலிக்கும் அதிகாரம், இந்த கமிட்டிக்கு அளிக்கப்படும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கும் பட்சத்தில், உரிமம் ரத்து செய்யப்படும்படியும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அரசு கோட்டா மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும்; நிர்வாக கோட்டா மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும்; மற்ற மாநில மாணவர்களுக்கு 1.40 லட்சம் ரூபாயும்; கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், 611 நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. இதில், 35,000 சீட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.