முதல்வர் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூடுவரா: எச்.ராஜா கேள்வி
முதல்வர் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூடுவரா: எச்.ராஜா கேள்வி
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:55 PM
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மடத்துத்தெருவில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 10 அடி உயரத்தில், விநாயகர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:
'ஹிந்து தர்மம், சனாதனத்தை மலேரியா, டெங்கு பரப்பும் கொசுவை போல அழிப்போம்' என பேசினர். ஆனால், சனாதன தர்மம் என்றால், அது ஹிந்து மதம் தான் என, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதற்கு திராவிட இயக்க முன்னோடிகள் என்ன சொல்வர்
பழநியில் முருகன் பெயரில் நடத்திய மாநாடு, ஆன்மிக மாநாடு அல்ல என, அமைச்சர் உதயநிதி பேசினார். அந்த மாநாடு, ஹிந்து விரோத மாநாடு. முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்கின்றனர். அதை உண்மையான ஹிந்துக்கள் ஏற்க மாட்டர்.
சனாதன ஹிந்து மதத்திற்கு எதிரி அமைச்சர் உதயநிதி. அவர் மீது எல்லா மாநிலங்களிலும் வழக்கு உள்ளது. மூத்த அமைச்சர்கள் ஹிந்து விரோத உதயநிதியின் அடிமைகள்.
தமிழகத்தில் மொழி கொள்கை தொடர்பாக, படிக்கிற மாணவர்களும்; பெற்றோரும் தான் முடிவெடுக்க வேண்டும். மொழிகளைப் பற்றி அமைச்சர் பொன்முடி பேசக்கூடாது. தமிழகத்தின் 294 பொறியியல் கல்லுாரிகளில் 980 ஆசிரியர்கள், ஆதார் அட்டையைப் போலியாக வடிவமைத்து, பணி பெற்றுள்ளனர்.
தன் துறையை கவனிக்க முடியாத திறமையற்ற, திராணியற்ற அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் ஊழல் பேர்வழிகள். சென்னை வேளச்சேரியில், ஹிந்தி, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூட முடியுமா?
முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி இல்லை. அப்படி என்றால், நீங்களே கருணாநிதியை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.
மொழிக்கொள்கையில் பிடிவாதம் பிடித்தால், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் நடத்தும் அனைத்து சி.பி.எஸ்.சி., பள்ளிகளின் வாசலிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த போராட்டம் நடத்துவோம்.
முதலில் அதை எல்லாம் சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்க வேண்டும். பேசுவதற்கு நீங்கள் யார் ஒரு மொழியை படிக்கக் கூடாது என தடுப்பது கூட, ஒரு திணிப்புதான்.
இவ்வாறு அவர் கூறினார்.