போதை பொருட்கள் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க அரசு கண்டிப்பு
போதை பொருட்கள் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க அரசு கண்டிப்பு
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:56 PM
சென்னை:
மாணவியருக்கு எதிரான பாலியல் சீண்டல் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை சுற்றிய பகுதிகளில், போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் கல்வி நிறுவன முதல்வர்களுடன், தலைமை செயலர் முருகானந்தம், நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வழியே ஆலோசனை நடத்தினார்.
தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர்ஜிவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள், நேரடியாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், தலைமை செயலர் முருகானந்தம் பேசியதாவது:
பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவியர் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் வந்தால், உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறாக நடப்போர் குறித்து புகார் தெரிவிக்க, மாணவியரை ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் அருகே, போதை பொருள் விற்கப்பட்டால், விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் பயன்படுத்துவோர், விற்போர் குறித்து தகவல் தெரிவிக்கும்படி, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
போதை பொருள் நடமாட்டம், கல்வி நிறுவனங்கள் மற்றும் அருகில் இல்லாததை உறுதிப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.