பி.பார்ம்., படித்தவர்களை மருந்தாளுனராக நியமிக்க எதிர்ப்பு
பி.பார்ம்., படித்தவர்களை மருந்தாளுனராக நியமிக்க எதிர்ப்பு
UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM
ADDED : ஜூலை 25, 2024 07:52 PM

சென்னை:
அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கு, பி.பார்ம்., படித்தவர்களை நியமிப்பதற்கு, தமிழ்நாடு அனைத்து பட்டய மருந்தாளுனர் ஒருங்கிணைப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 986 பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக, மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதற்கிடையே, மருந்தாளுனர் பணியிடங்களுக்கு, பி.பார்ம்., எம்.பார்ம்., படித்தவர்களை தான் அதிகம் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
அவர்கள், மருந்து தயாரிக்கும் இடங்களிலும், மருந்து கிடங்குகளிலும் பணியாற்ற படித்தவர்கள்; டி.பார்ம்., படித்தவர்கள் மட்டுமே மருந்தாளுனர்களாக பணியாற்ற முடியும் என, அனைத்து பட்டய மருந்தாளுனர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பட்டய மருந்தாளுனர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் முரளீதரன் கூறியதாவது:
பி.பார்ம்., - எம்.பார்ம்., படித்தவர்களுக்கு, மருந்தக ஆய்வாளர், மருந்து பகுப்பாய்வாளர், ஆராய்ச்சி அலுவலர், விரிவுரையாளர் உள்ளிட்ட அரசு பணிகள் உள்ளன. ஆனால், டி.பார்ம்., படித்தவர்களுக்கு, அரசு பணியில் மருந்தாளுனர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன.
தற்போது, 986 பணியிடங்களுக்கு அரசு தேர்ந்தெடுத்துள்ள பணியாளர்களில், 5 சதவீதம் கூட, டி.பார்ம்., படித்தவர்கள் இல்லை. இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே, மருந்தாளுனர் பணியிடங்களில் டி.பார்ம்., படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.