UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:12 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, 303 வாகனங்கள் ஆய்வு செய்து, 29 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி, பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடந்தது.
முதற்கட்டமாக, பள்ளி வாகன டிரைவர்களுக்கு, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., (பொ) நாகராஜ், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சப் - கலெக்டர் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதிகாரிகள், ஒவ்வொரு பஸ்சாக ஆய்வு செய்தனர். அதில், படிக்கட்டு, அவசர கால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 34 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.டிரைவர்களுக்கு அறிவுரை
சப் - கலெக்டர் கூறுகையில், கல்வி மாவட்டத்தில் உள்ள, 372 தனியார் பள்ளி வாகனங்கள், குழு வாயிலாக ஆய்வு செய்யப்படுகிறது. டிரைவர் லைசென்ஸ், சென்சார் முறையாக இயங்குகிறதா; படிக்கட்டுகள், குழந்தைகள் எளிதாக செல்லும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை சரி செய்து காண்பித்த பின், சான்றிதழ் வழங்கப்படுகிறது. வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மறு ஆய்வு நடக்கும்
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி வாகனங்கள் கொண்டு வரவழைக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது. கல்வி மாவட்டத்தில் உள்ள, 66 பள்ளிகளில், 372 வாகனங்கள் உள்ளன. முதல் நாளான நேற்று மொத்தம், 303 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
அதில், கேமரா வேலை செய்யாதது; ரிவர்ஸ் கேமரா பழுது, அவசர வழி பராமரிப்பில்லாதது; முதல் உதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் காலாவதியானது போன்ற குறைபாடுகள் உள்ள, 29 வாகனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, ஏழு நாட்களுக்குள் மீண்டும் கொண்டு வர அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் பின், அந்த வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும். ஒர்க் ஷாப்பில் உள்ள, 69 வாககனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
செயல்விளக்கம்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் கணபதி தலைமையில், தீ விபத்துகள் ஏற்பட்டால், எவ்வாறு அவற்றை தீயை அணைப்பது என்பது குறித்து, செயல்விளக்கம் அளித்தனர். டிரைவர்களின் சந்தேகங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.