ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., அறிவுறுத்தல்
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., அறிவுறுத்தல்
UPDATED : அக் 12, 2026 11:46 AM
ADDED : அக் 12, 2026 11:48 AM

புதுடில்லி:
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ., தொழில்நுட்பம்) குறித்து பல்வேறு முக்கிய கருத்துக்களை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. நிறுவனங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அப்படியே நம்புவதை நிறுத்த வேண்டும். நிறுவனங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்த மேம்பட்ட ஏ.ஐ., மாடல்களைப் பயன்படுத்தும் போது, அவற்றுக்கு ஒரு 'எமர்ஜென்சி பிரேக்' போன்ற கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஏ.ஐ., தொழில்நுட்பம் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் போது, ஏதேனும் தவறு நடந்தால் அதை நடுவிலேயே நிறுத்தவோ அல்லது முடக்கவோ தகுதியுடைய மனிதர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஏ.ஐ., மாடல்களை உருவாக்கும் நிறுவனங்களின் உறுதிமொழிகளை மட்டுமே நிறுவனங்கள் நம்பிவிடக் கூடாது.
எந்தவொரு அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய ஏ.ஐ., மாடலை பயன்படுத்தினாலும், அது பாதுகாப்பற்றது, அச்சுறுத்தலானது என்ற அடிப்படையிலேயே அணுகி, ஆரம்பத்திலிருந்தே அதற்கான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க வேண்டும்.
நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைத் திருடக்கூடிய அல்லது தவறாகப் பயன்படுத்தக்கூடிய நிறுவனத்திற்குள் இருக்கும் ஒரு ஊழியரைப் போலவே நினைத்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏ.ஐ., என்பது ஒரு மனிதனின் முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகார அமைப்பாக மாறிவிடக் கூடாது.
எவ்வளவு பெரிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் மனிதர்களால் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்யா நாதெல்லாவின் இந்த கருத்து உலகளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.
