UPDATED : ஆக 21, 2026 04:25 PM
ADDED : ஆக 21, 2026 04:27 PM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழிலாளர் துறை மூலம் நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கடந்த ஜூலை 9ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.
இது குறித்து தொழிலாளர் துறை வேலை வாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு 'EMPLOYMENT EXCHANGE PUDUCHERRY YOUTUBE CHANNEL' மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஜூலை 9ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பானது அரசு வேலை நாட்களில் மாலை 6:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மூன்று மாதங்களுக்கு நடக்கிறது.
இதில், நேற்று வரை 76 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் பயிற்சி வகுப்பை பார்த்து பயன் அடைத்துள்ளனர். இந்த பயிற்சி வகுப்பானது ஆங்கிலம், வரலாறு, கணினி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொது அறிவு, கணிதம், பகுத்தறிவு, அறவியல், இந்திய அரசியலமைப்பு, அரசியல் அறிவியல் போன்ற பாடங்களுக்கு சிறந்த பயிற்சி பெற்ற வல்லுனர்களால் நடத்தப்படுகிறது.
வருங்காலத்தில் அரசு நடத்த உத்தேசித்துள்ள பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் இந்த பயிற்சி வகுப்பு மிகவும் உதவும். எனவே, போட்டித் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து மாணவர்களும், இந்த இலவச இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
