UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 09:06 PM
சென்னை:
தமிழகத்தில் குறைவாக உள்ள மருந்தியல் கல்லுாரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், தேசிய மருந்தாளுனர் மாநாடு நேற்று நடந்தது.
இந்நிகழ்வில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக, பல்வேறு நாடுகளின் மருத்துவ வல்லுனர்கள், அறிவியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து, இம்மாநாடு நடக்கிறது. இதில், 200க்கும் மேற்பட்ட மருந்தியல் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து, 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்திய மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 40 சதவீத ஜெனரிக் மருந்துகளும், ஐரோப்பிய நாடுகளில் 30 சதவீத இந்திய மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், தமிழக மருத்துவ செயல் திட்டங்களை பின்பற்ற துவங்கியுள்ளன. தமிழகத்தில் மருந்தியல் கல்லுாரிகள் குறைவாக உள்ளன. எனவே, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, மருந்தியல் கல்லுாரிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில், 2,553 டாக்டர் காலி பணியிடங்கள் உள்ளன. விரைவில் அவற்றை நிரப்ப, ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். சுதந்திர தினத்தில், 1,000 மக்கள் மருந்தகம் துவங்கப்படும். இதற்காக, 220 வகை ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.