ரீல்ஸ் வீடியோ பார்க்க தானா சமூக வலைதளங்கள்? தமிழ் புத்தக திருவிழாவில் இளைஞர்கள் கேள்வி
ரீல்ஸ் வீடியோ பார்க்க தானா சமூக வலைதளங்கள்? தமிழ் புத்தக திருவிழாவில் இளைஞர்கள் கேள்வி
UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 09:05 PM
பெங்களூரு:
சமூக வலைத்தளங்கள் ரீல்ஸ் வீடியோ பார்க்க மட்டும் தான் பயன்படுத்துகிறோமா? வேறு எந்த தகவலையும் பார்க்க மாட்டோமா? என, பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட, இளம்தலைமுறையினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்று சொல்வது உண்டு. இந்த சொல்லுக்கு ஏற்றார்போல, தமிழர்கள் எங்கு சென்றாலும் மரியாதை தான் கிடைக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், தமிழர்கள் வசிக்கின்றனர்.
குறிப்பாக பெங்களூரு, மைசூரு, ஷிவமொக்கா, பல்லாரி, தங்கவயல், பெங்களூரு ரூரல் ஆகிய மாவட்டங்களில் அதிகம் வசிக்கின்றனர்.
சட்டசபை தேர்தலின்போது பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில், எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், தமிழர்கள் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் இருந்து வேலை விஷயமாக இங்கு குடிபெயர்ந்துவிட்டனர். இங்கேயே வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு தமிழ் நன்றாக பேச, எழுத தெரிகிறது.
பாரம்பரிய விளையாட்டு
ஆனால் கர்நாடகாவில் வசிக்கும் இந்த கால தமிழ் பிள்ளைகளுக்கு, தாய்மொழி நன்றாக பேச தெரிகிறது. ஆனால் எழுத படிக்க தெரிவது இல்லை. தமிழர்களின் பாரம்பரியம், விளையாட்டுகள் பற்றியும் அவ்வளவாக தெரிவது இல்லை.
இதனால் தமிழ் எழுத, படிக்க தெரியாத தமிழ் குழந்தைகளுக்கு, தமிழின் மீது அதிக ஆர்வம் எழ வேண்டும் என்ற நோக்கத்தில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 2022ல், முதன்முறையாக பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழா நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் கடந்த ஆண்டும் தமிழ் புத்தக திருவிழா நடந்தது. இந்த ஆண்டு மூன்றாவது தமிழ் புத்தக திருவிழா, 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்துவிட்டன.
இந்த நான்கு நாட்களும் புத்தக திருவிழாவிற்கு, தமிழர்கள், புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த புத்தக திருவிழா பற்றி அறிந்ததும், பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன், இங்கு திரளாக வருகின்றனர்.
இங்கு இடம்பெற்றுள்ள 35 புத்தக அரங்குகளுக்கு சென்று, தங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதி இருக்கும், புத்தகங்களை தேடி வாங்கிச் செல்கின்றனர்.
குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு தேவையான ஓவிய புத்தகம், கதை புத்தகங்களை ஆர்வமுடன் வாங்குகின்றனர். புத்தக அரங்குகளில் ஒரு விசிட் அடித்துவிட்டு, மாடியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காண, ஆர்வமாக செல்கின்றனர்.
பல்வேறு பள்ளிகளின் மாணவர்களின் பங்கேற்கும் நடன போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கதை சொல்லுதல் போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர். மாணவ, மாணவியரின் திறமைகளை கண்டு வியந்து போகின்றனர்.
புத்தக கண்காட்சியில் தமிழ் மரபு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையும் உள்ளது. அங்கு செல்லும் மக்கள் பம்பரம் விட்டும், ஸ்கிப்பிங் விளையாடியும் மகிழ்ச்சி அடைகின்றனர். தாயக்கட்டை, பம்பரம், பரம பதம் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
பம்பரம் விட தெரியாமல் விழிக்கும் மகன், மகளுக்கு அவர்களின் தந்தையர், பம்பரத்தில் கயிற்றை சுற்றிக் கொடுத்து, இப்படி தான் விட வேண்டும் என்று பயிற்சி அளிக்கின்றனர். முதல்முறை பம்பரத்தை சுழல விட்ட மகிழ்ச்சியில் ஆரவாரத்தில், அவர்கள் துள்ளிக்குதிக்கின்றனர்.
ஒருமுறை சொல்லிக் கொடுத்தும் பம்பரம் விட தெரியாம முழிக்குற பிள்ளைகள் கிட்ட, என்னாடா எத்தனை தடவ சொல்லித் தரதுன்னு அப்பாக்கள் கிண்டல் அடிக்குறதும், இப்போ தான் கத்துகிட்டு வர்றாங்க... போக, போக சூப்பராக பண்ணுவாங்கன்னு அம்மாக்கள் ஆதரவு தெரிவிக்குறதுன்னும் ஒரே கலகலப்பாக போயிட்டு இருக்கு.
இன்ஸ்டாகிராம்
இந்த கால இளைஞர்களுக்கு, மொபைல் போன் இருந்தால் போதும்; உலகமே தெரியாது என்ற பேச்சு அடிபடும்.
ஆனால் புத்தக திருவிழாவில் இளம் தலைமுறையினரும் அதிகம் பங்கேற்கின்றனர். மொபைல் போன் எங்கள் கையில் இருந்தால், ரீல்ஸ் வீடியோக்கள் மட்டும் தான் பார்ப்போமா... ஏன் நாட்டு நடப்புகளை பார்க்க மாட்டோமா?
புத்தக திருவிழா நடக்கிறது என்பதை இன்ஸ்டாகிராமில் வீடியோ பார்த்து தான் வந்தோம். சும்மா ரீல்ஸ் வீடியோ மட்டும் பார்ப்போம்னு சொல்லாதீங்க. எங்களுக்கும் தமிழ் மேல பற்று இருக்கு சொல்லுறாங்க. புத்தகங்களையும் கை நிறைய வாங்கிட்டுப் போறாங்க.
ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹள்ளி, பொம்மசந்திரா, எலக்ட்ரானிக் சிட்டி, ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ள கே.ஆர்.புரம் உட்பட, நகரின் வெளிவட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களும், தங்கள் குடும்பத்தினருடன் காரில் புத்தக திருவிழா பார்க்க வருகின்றனர்.
பஸ்களில் வருவோர், புத்தக திருவிழா நடக்குற இடம் எங்கப்பா இருக்குன்னு ஆர்வமாக பார்க்குறாங்க. புத்தக திருவிழா நடக்குற அரங்குல நுழைவும் போது, நிறைய பேர் மனசுல பட்டாம் பூச்சி பறக்கிறது.
பள்ளி மாணவ - மாணவியர் புத்தகங்களை தேடி எடுக்கும் போது, ஏய் நீ அந்த புத்தகத்தை எடுத்துட்டியா... நான் இந்த புத்தகத்தை எடுத்து இருக்கேன். நீ படிச்சிட்டு எனக்கு கொடு... நான் படிச்சுட்டு உனக்கு தரேன் டீலிங் பேசுறாங்க.
மொத்தத்துல பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் அறிவு பசியை தீர்க்கவும், புத்தகம் படிக்குற பழக்கத்தை ஊக்குவிக்கவும், இந்த புத்தக திருவிழா ஒரு வரமாக அமைச்சு இருக்குன்னு சொன்னால், மிகையில்லை.