ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி; ஜன.,10க்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு
ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி; ஜன.,10க்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 10:00 AM

சேலம்:
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி குறித்த இணையவழி பயிற்சியை, ஜன., 10 க்குள் முடித்து, அறிக்கையை அனுப்பி வைக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான கல்வி வழங்குவது குறித்து, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும், இணையவழியில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த, 16 முதல், ஏழு கட்டங்களாக எமிஸ் இணையதளத்தில், எல்.எம்.எஸ்., போர்டல் வாயிலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 21 வகையான குறைபாடு குறித்த முன்னோட்டம், உடல், உணர்திறன், அறிவு சார் குறைபாடு உள்ளிட்ட ஏழு புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும், ஜன.,10க்குள் பயிற்சியை நிறைவு செய்து, முன்னேற்ற அறிக்கையை இ-மெயில் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.