திறமை மட்டுமே நம்மை அடையாளப்படுத்தும்: தினமலர் பட்டம் விருது விழாவில் அறிவுரை
திறமை மட்டுமே நம்மை அடையாளப்படுத்தும்: தினமலர் பட்டம் விருது விழாவில் அறிவுரை
UPDATED : அக் 17, 2025 08:17 AM
ADDED : அக் 17, 2025 08:18 AM

கோவை:
''திறமை மட்டுமே, நீங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தும்,'' என, பள்ளி மாணவியருக்கு, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி வினா விருது நிகழ்ச்சி, மாநகராட்சி எஸ்.ஆர்.பி., அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
நடப்பு கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளி அளவில் நேற்று துவங்கிய போட்டியில், முதற்கட்ட சுற்றில் 230 பேர் பங்கேற்றனர். இரண்டாவது கட்ட சுற்றுக்கு, எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், 'ஏ' அணியில் விமலா, ஸ்ரீஜா, 'பி' அணியில் ரக்ஷரா, ஸ்ரீமதி, 'சி' அணியில், கனிஷ்கா, மயூரா, 'டி' அணியில் ஷெரின் அன்சியா, மேக வர்ஷனா, 'இ' அணியில், இந்துமதி, அக்ஷயா, 'எப்' அணியில் கவுரி மீனாட்சி, ஹரிணிஸ்ரீ, 'ஜி' அணியில் சஷ்டிகா, சஞ்சனா, 'எச்' அணியில் நதிதா பேகம், சிவசக்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பல சுற்றுகள் கேள்விகள் கேட்கப்பட்டு, 'டி' அணியை சேர்ந்த ஷெரின் அன்சியா, மேக வர்ஷனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கும், இரண்டாவது சுற்றில் பங்கேற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்று பேசுகையில், ''பள்ளியில் படிக்கும் மாணவியரின் நலனுக்கும், பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், கராத்தே, சிலம்பம், இசை உட்பட பல பயிற்சிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் ஏற்பாடு செய்து கொடுத்தது, மாணவியருக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது,'' என்றார். ஒன்பதாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளி மாணவியருக்கு, கேடயம், சான்றிதழ், பதக்கம் வழங்கி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:
'தினமலர்' மாணவர் பதிப்பான பட்டம் சார்பில், கடந்தாண்டு நடத்திய வினாடி வினா இறுதிப் போட்டியில், மாநகராட்சி பள்ளி மாணவியரும் தகுதி பெற்றது, பலரையும் புருவம் உயர்த்த செய்தது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பட்டம் இதழை தொடர்ந்து வாசித்து வரும் போது, தெரிந்து கொள்ள இவ்வளவு விஷயங்களா என ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உங்களை மென்மேலும் கற்க வைக்கும்.
பள்ளியில் இருக்கக் கூடிய மெய்நிகர் ஆய்வகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு மெய்நிகர் மற்றும் மிகை யதார்த்த தொழில்நுட்பங்களை பயன் படுத்தி, மேம்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகின்றன.
நீங்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவது திறமை மட்டுமே. அதை முடிந்தளவு முயற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். சிறந்த மாணவர்கள் என்று பெயரெடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோவையில் உள்ள 64 மாநகராட்சி பள்ளிகளில், பட்டம் வினாடி வினா விருது நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் அரையிறுதி போட்டிக்கு பின், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். ஆசிரியர் ஸ்ரீலதா நன்றி கூறினார்.
ஆசிரியர்கள் ஆனந்தி, கார்த்திகா, சுஜினா, ஸ்ரீதேவி, ராஜபிரியா, மெய்நிகர் ஆய்வக ஆசிரியர் கலையரசி ஆகியோர் பங்கேற்றனர்.
கற்றுத் தருவது தேடல்
மாணவி மேக வர்ஷனா கூறுகையில், ''கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை பட்டம் பதிப்பு வழங்குகிறது. இதை தொடர்ந்து படித்து வந்தாலே, உலகத்தின் அரிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் படிக்கும் போது, எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளில் ஜெயிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார். மாணவி ஷெரின் அன்சியா கூறுகையில், ''நவீன தொழில்நுட்பத்தில் தினமும் கற்றல் என்பது இன்றியமையாதது. நம்மை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது படிப்பு மற்றும் பல விஷயங்களை கற்றுக் கொள்வது தான். நமக்கு தெரியாத எவ்வளவோ நிகழ்வுகள் இருக்கின்றன என, நமக்கு கற்றுத் தருவது தேடல் தான். 'பட்டம்' அதை சிறப்பாகவே செய்து வருகிறது,'' என்றார்.